×

அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை இடமாறுகிறது அண்ணா பஸ் நிலையம் விரிவாக்கம்-செட்டிக்குளம், ராணித்தோட்டம் டெப்போக்கள் ஆய்வு

நாகர்கோவில் : நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் விரிவாக்கப்படுகிறது. இதற்காக மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை இடம்மாற உள்ளது. ராணித்தோட்டம் டெப்போ அல்லது செட்டிக்குளம் டெப்போவுக்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.1956-ம் ஆண்டுக்கு முன் வரை குமரி மாவட்டம் கேரள மாநிலத்தில் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு மற்றும் மணிமேடைப் பகுதிகளிலிருந்து தனியார் பேருந்துகள் மட்டும் தான் இயக்கப்பட்டன.

அரசே பேருந்துகளை இயக்க வேண்டும் என, அப்போது கோரிக்கை எழுந்தது. கேரள மாநிலத்தில் பேருந்து நிலையமும் பணிமனையும் சேர்த்து தான் அமைக்கப்படும். அதனால், நகராட்சி சார்பில் இடம் ஒதுக்கித் தந்தால் பேருந்துகள் இயக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறினர். அதைத் தொடர்ந்து நாகர்கோவில் மீனாட்சிபுரம் குளத்தின் கரையில் நகராட்சிக்கு சொந்தமான இரண்டே கால் ஏக்கர் நிலத்தை கேரளப் போக்குவரத்துத் துறைக்கு வழங்கியது அப்போதைய நகராட்சி நிர்வாகம்.

 அந்த இடத்தில் பணிமனையுடன்கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பஸ் சர்வீஸ் நடந்து வந்தது.குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த பிறகு, கேரளப் போக்குவரத்துத் துறை அந்த இடத்தை தமிழகப் போக்குவரத்துத் துறையிடம் ஒப்படைத்துவிட்டது. அந்த இடத்தில் திருவள்ளுவர் பேருந்து நிலையம் மற்றும் பணிமனை ஆகியவை இயங்கி வந்தன. அதற்கு அருகிலேயே இரண்டே கால் ஏக்கர் பரப்பில் உள்ளூர் பேருந்துகளுக்காக அண்ணா பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, வெளியூர் சென்று வரும் பேருந்துகளுக்காக வடசேரி பகுதியில் தனியாகப் பேருந்துநிலையம் அமைக்கப்பட்டதால், பழைய இடத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை மட்டும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அண்ணா பஸ் நிலையம் தற்போது நெருக்கடியில் தவிக்கிறது. அண்ணா பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். விரைவு போக்குவரத்து கழக பணிமனையை காலி செய்து விட்டு, அந்த பகுதியையும் பஸ் நிலையமாக மாற்ற வேண்டும் என்றனர். ஆனால் விரைவு போக்குவரத்து கழகம் இடத்தை காலி செய்ய மறுத்து வந்தது. இது தொடர்பாக மாநகராட்சிக்கும், விரைவு போக்குவரத்து கழகத்துக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது.

இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்ற மகேஷ், மாநகரை விரிவாக்கம் செய்து அழகுப்படுத்தும் பணிகளை தொடங்கினார். குறிப்பாக பஸ் நிலையங்களை விரிவாக்கம் செய்ய அதிக முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில் மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா பஸ் நிலையத்தில் ரூ.2 கோடியில் விரிவாக்கம் பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் விரைவு போக்குவரத்து கழகம் தனது பணிமனையை காலி செய்ய மறுத்து வந்தது.

இந்த பிரச்னை குறித்து மேயர் மகேஷ்,  கலெக்டர் அரவிந்த், ஆணையர் ஆனந்த மோகன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். போக்குவரத்து கழக அதிகாரிகளுடனும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் அமைச்சர் மனோதங்கராஜ், பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதன் பேரில் தற்போது மீனாட்சிபுரத்தில் உள்ள விரைவு போக்குவரத்து கழகத்தை காலி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக ராணித்ேதாட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் நிலத்தில், 1 ஏக்கரை விரைவு போக்குவரத்து கழகத்துக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளனர்.

விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை தற்போது 60 பஸ்கள் உள்ளன. இதை கணக்கில் கொண்டு செட்டிக்குளத்தில் தற்போது உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு, விரைவு போக்குவரத்து கழக பணிமனையை மாற்றுவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழக செட்டிக்குளம் பணிமனையில் தற்போது 60 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களை  ராணித்தோட்டம் 1, 2, 3 ஆகிய டெப்போக்களுக்கு பிரித்து கொடுத்து விட்டு, விரைவு போக்குவரத்து கழக பணிமனையை இயக்கலாம் என்றும் யோசனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

வணிக வளாகத்துடன் பஸ் நிலையம் அமைக்கலாம்

அண்ணா பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். விரைவு போக்குவரத்து கழகத்தை இடம்மாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து மனுக்கள் அளித்து வந்த, நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ராம் கூறுகையில், செட்டிக்குளம் பணிமனைக்கு விரைவு போக்குவரத்து கழகத்தை மாற்றுவதன் மூலம் அண்ணா பஸ் நிலையம் விரிவாக்கம் அடையும். இதை தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் குமரி மாவட்ட மக்களுக்கே மிகப்பெரிய பலன் உள்ளதாக இருக்கும்.

இதன் மூலம் மாவட்டத்தின் மிகப்பெரிய பஸ் நிலையமாக, அண்ணா பஸ் நிலையம் மாறும். மொத்தம் 4.48 ஏக்கர் வரும். இதற்காக நடவடிக்கை எடுத்து வரும் கலெக்டர், மேயர், ஆணையர் ஆகியோருக்கு எங்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். விரிவாக்கம் செய்யப்படும் இடத்தில், பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சுமார் 250 கார்கள், 2000 பைக்குகளும் நிறுத்தும் வகையில் நல்ல வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.  அங்கிருந்தே வாகனங்கள் மீனாட்சிபுரம் அவ்வை சண்முகம் சாலை செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இதே போல் எஸ்.பி. அலுவலகத்தின் பின்புறம் சுமார் 40 அடி அகலத்தில் கழிவு நீர் ஓடை உண்டு. மாநகராட்சி பழைய வரைபடத்தில் இந்த ஓடை உள்ளது.

தற்போது இந்த ஓடை, ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஓடையை ஆக்ரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும். இந்த ஆக்ரமிப்பை அகற்றினால் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்த எஸ்.பி. அலுவலகம் அருகில் உள்ள பள்ளி கூடம் வரை புதிய பாதை அமைக்க முடியும். மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையத்தையும், விரைவு போக்குவரத்து கழகத்தை இணைத்து பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யும் போது மிகப்பெரிய வணிக வளாகமும் அமைத்து, மாநகராட்சி வருமானத்தை பெருக்க முடியும் என்றார்.

Tags : Govt Rapid Transport Corporation ,Anna Bus Stand Extension ,Chettikulam ,Ranithottam Depots , Nagercoil: Anna Bus Stand in Nagercoil is being expanded. For this, the Meenakshipuram Government Rapid Transport Corporation workshop will be shifted
× RELATED அரசு விரைவு போக்குவரத்து கழக...